Tuesday, October 4, 2011

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் காதல் கணவருடன் செல்ல அனுமதி

சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. இவருக்கு வித்யாராணி, பிரபா ஆகிய 2 மகள் உள்ளனர். வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் மரிய தீபக் தனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், நான் லயோலா கல்லூரியில் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் 2 1/2 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார். அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.

எனவே எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன், ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் வித்யாராணியை நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் வித்யாவை அழைத்து, நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு வித்யா கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்று உத்தர விட்டனர்.

இதையடுத்து ஐகோர்ட்டை விட்டு வெளியே வந்த வித்யாவை தீபக் மகிழ்ச்சியுடன் வரவேற்று தன்னுடன் அழைத்துச் சென்றார்.